புவியெங்கும் பரவி உயிர் நலம் வேண்டி தவமிருந்த சித்தர்களை ஈன்ற புனித
பாரதத்தில் தருமமிகு சென்னையில் அருட்பிரகாச வள்ளலார், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் போன்று
பூக்கடை, தங்கசாலை, பாரிமுனை, உயர்நீதிமன்ற வளாகம் என பல இடங்களில் ஞான சூரியனாக
வலம் வந்து கடுந்தவத்தால் உலகைக் காத்த உத்தம சித்தர் தாம் சத்குரு ஹைகோர்ட் அய்யா ஸ்ரீ ராஜராஜ
சுவாமிகள் ஆவார்கள். 1975 ஆம் ஆண்டு முதல் சுமார் 30 வருடங்களாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தின்
உள்ளேயும் வெளியேயும் தவமிருந்த மகாசுவாமிகளை நிறைய பக்தர்களும், அடியார் பெருமக்களும் சந்தித்து...
உரையாடி... அருளாசி பெற்றுச் சென்றிருக்கின்றனர்.
ஜென்மத் தொடர்புள்ள அதீத ஆன்மீக தாகம் கொண்ட சில அடியவர்களுக்கு பரிபாஷை மூலம்
தம் ஆத்ம சக்தியை ஞானதானம் செய்த மகாகுருநாதர் இவர். பாரபட்சமின்றி தம்மிடம் வரும்
அனைவரையும் ஆதரித்த தெய்வமாகிய அய்யா அடியவர்களுக்கு சத்தியத்தையும், தருமத்தையும் சூக்குமமாக
போதித்தார்.
வார்த்தைகளில் வடிக்க இயலாத எண்ணற்ற அற்புதங்களை, அதிசயங்களை மறைமுகமாக நிகழ்த்திய மகா சித்தபுருஷர். தூய்மையும்,
நேர்மையும், உண்மையுமே அவரளிக்கும் பரிசாகும். நம்பிக்கையுடனும், பொறுமையுடனும் வரும் அடியவர் தம் உடற்பிணிகள் நீங்கின.
மனக்கவலைகள் மாயமானது.. கர்மவினைகள் கரைந்தோடின... உள்ளிருக்கும் உத்தமப்பொருளை அழிவில்லா ஆனந்த
ஆத்ம ஞான குருவை தூண்டி எழச் செய்பவர் இப்பரம புண்ணிய புருஷர். உள்ளம் உருக வரும் அடியவர்க்கு தன்னுணர்வு
பொங்கும் தவத்தினை அள்ளிப் பருகச் செய்யும் ஆதி ஞானமூர்த்தி.
இரை தேடுவதோடு இறையும் தேடுவோம்...!
பலபணி இருப்பினும் திருப்பணி செய்வோம், வாருங்கள்...!